வன்னியில் சிக்கியது யார்?

Wednesday, March 25, 2009 | Labels: , | |

நாம் இப்போது அடிக்கடி வானொலி, தொலைக்காட்சி என்பவற்றில் கேட்கும், பார்க்கும் செய்திகளில் ஒரு செய்தி மிகவும் முக்கியப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வன்னியில் சிக்கியுள்ள மக்களை மீட்க வேண்டும். இதற்கு புலிகள் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்பதாகும். இவர்கள் யார்? ஏன் சிக்கினார்கள்? பிளேனில் பயணிக்கும் பயணிகளை தீவிரவாதிகள் கடத்தி தம் கோரிக்கைகளை நிறைவேற்ற பயணக் கைதிகளாக வைத்திருப்பர். அவர்களை விடுவிக்க சம்பந்தப்பட்ட நாடுகள் எல்லாம் ஒரே குரலாக வேண்டுகோள் விடுப்பர். பயணக் கைதிகள் சிக்கியது போன்றுதான் வன்னி மக்களும் சிக்கியுள்ளார்களா? இல்லையே. இவர்கள் தாமாகத்தானே அங்கே இருக்கின்றனர்.

               இந்த மக்களில் அநேகர் காலங்காலமாக வன்னியில் இருந்த பரம்பரைக் குடியினர். சிலர் அநுராதபுரத்தில் ஏற்பட்ட இனப்பிரச்சினையின் போது பாதுகாப்புத்தேடி புலம்பெயர்ந்த தமிழர். இன்னும் சிலர் மலையகத்தில் 1983ம் ஆண்டு ஏற்பட்ட பிரச்சினையின் போது புலம்பெயர்ந்து வன்னியில் வாழும் மலையகத்தமிழர். வேறு சிலர்,விவசாய நடவடிக்கைக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தவர்களும் ,1995ல் இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபோது அங்கிருந்து வெளியேறி அடைக்கலம் புகுந்தவர்களுமாகும்.. இவர்கள் பல கஸ்டங்களை அனுபவித்தபோதும்,  இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்வதை விட இது தமக்குப் பாதுகாப்பு என்ற சிந்தனை உடையவர்கள்.

             இவர்கள் என்ன செய்தார்கள்? இராணுவத்தினர் ஒவ்வோர் இடமாக நிலத்தினைக் கைப்பற்றிய போது அந்த இடங்களை விடுத்து பாதுகாப்புத்தேடி மன்னார் முருங்கன், உயிலங்குளம், மல்லாவி, துணுக்காய், வவுனிக்குளம், மாங்குளம், ஒட்டிசுட்டான், முறிகண்டி, கிளிநொச்சி, இரணைமடு, பரந்தன் ,பூநகரி இப்படியே எல்லா இடமாக ஓடியோடி பாதுகாப்புத்தேடி ஓட முடியாமல் இன்று ஓரிடத்தில் தரித்து நிற்க வேண்டியவர்களாயினர். இவர்கள்தான் சிக்கிய மக்கள். இவர்கள் இவ்வளவு தூரம் ஓடும்போதும் இராணுவத்திடம் பாதுகாப்புக் கிடைக்கும் என்று எந்த நேரத்திலும் அவர்களிடம் வந்ததில்லையே. போராளிகள் அந்த மக்களை துன்புறுத்தினாலோ, காயப்படுத்தினாலோ, கொலை செய்தாலோ மக்கள் அவர்களுடன் சென்றிருப்பார்களா? இராணுவம் தமக்குப் பாதுகாப்புத் தரும் என்று ஒரு போதும் மக்கள் நம்பவில்லை, நம்பவும் மாட்டார்கள். நம்பியிருந்தால் எப்போவோ இவர்களிடம் வந்திருப்பார்கள்.

          கடைசி நேரத்தில் வரும் மக்கள் ஏன் வருகிறார்கள்? செல்லினாலும், குண்டுமழையினாலும் ஒவ்வொரு நாளும் காயப்படும், இறக்கும் மக்களைப் பாரக்கிறார்கள். அவர்களும் அதை அனுபவிக்கிறார்கள். நோய்கள் ,மருந்தின்மை, உணவின்மை, குண்டுச்சத்தங்கள் அதனால் நித்திரையின்மை இருக்க இடமின்மை என்று இவர்களுக்க ஏற்பட்ட அழுத்தங்கள் எண்ணிலடங்கா. எனவே இப்படி வாழ்றதைவிட வெளியே சென்று சாவது மேல் என்ற விரக்தி நிலையிலேயே மக்கள் வருகிறார்கள் என்பதுதான் உண்மை.

       மனிதாபிமான நடவடிக்கை என்கிறார்களே எது மனிதாபிமான நடவடிக்கை?. 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உலக நாடுகள் எல்லாம் முன்வந்து உதவி அளித்தன. அது மனிதாபிமானம்.  எமது நாட்டுக்கும் உதவி அளித்தன. இதனால் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தறை, காலி என்ற பல இடங்களில் பாடசாலைகள் வீடுகள் , ஆஸ்பத்திரிகள் என்பன கட்டி அவர்களுக்கு கொடுத்து சிறிது ஆறுதல் அளித்தனர். அது மனிதாபிமானப் பணிதான். அதே சுனாமி அலை வன்னி மக்களை விட்டு வைத்ததா? இல்லை. முல்லைத்தீவு, புதுக்குடியிர்ப்பு, வடமராட்சி கிழக்கு, மன்னார் என எல்லா இடமும் தன் தடத்தைப் பதித்துச் சென்றது. குடும்பம் குடும்பமாக அநேகர் இறந்தனர். நூற்றுக் கணக்கானோரை ஒரே குழியில் போட்டுப் புதைத்ததை மனிதாபிமான நடவடிக்கை செய்பவர் அறிய வில்லையா? அல்லது காணவில்லையா?

மீதியாக மிஞ்சி நிற்கும் மக்களைத்தான் இன்று கொன்று குவித்தும் காயமடையச் செய்தும் சிக்கிய மக்களை மீட்கின்றனர். விழுந்தவனை மாடேறி மிதித்த கதை இதுதான். இவர்கள்தான் சிக்கிய மக்கள். சொல்லொணாதட துயரில் அவர்கள். வெறிறிக்களிப்பில் இவர்கள்!.

0 comments: