கறுப்பு யூலை – சில நினைவுகள்

Monday, July 27, 2009 | Labels: , , , , | 0 comments |

இலங்கை சுதந்திரம் அடைந்த பின் சிங்களவர்க்கும், தமிழர்களுக்கும் இடையில் அவ்வப் போது இனமுறுகல் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. யாழ்குடாநாட்டில் 70 களின் பின்னர் இராணுவத்தினரதும் பொலிசாரினதும் அடாவடித்தனங்கள் அதிகரித்திருந்தன. இளைஞர்களை அடிக்கடி தாக்குவது, தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டின் போது கலவரத்தை உண்டு பண்ணி கன்னீர் புகை பிரயோகத்தை மக்கள் மீது பிரயோகித்து அவர்களை நாலாபுறமும் கலைந்தோடச்செய்து 9 அப்பாவி மக்களைக் கொன்றும் நூற்றுக்கணக்கானோரை காயப்படுத்தியும் அம்மகாநாடு நடக்கவிடாமல் குழப்பினர். இதன்போது அவர்களுக்கு உடந்தையாக சில தமிழ் பொலிசாரும் செயற்பட்டனர். இத்தோடு யாழ் நூலகம் எரிப்பு, வர்த்தக நிலையங்கள் எரிப்பு, ஊடக நிலையங்கள் தாக்கியழிப்பு போன்ற இன்னோரன்ன வன்முறைகள் காவல் துறையினரால் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதனால் சீற்றங் கொண்ட இளைஞர்கள் பற்பல குழுக்களாக சேர்ந்து இவர்களுக்கு எதிராகச் செயற்படத் தொடங்கினர்.

இதன் விளைவாக குட்டிமணி, தங்கதுரை, பிரபாகரன் என பல தலைவர்கள் தோன்றினர். 1983ம் ஆண்டு யூலை மாதம் வி.பு.தலைவர் பிரபாகரனும் அவரது சகாக்களும் இராணுவத்தினரை மறித்து தாக்குதல் நடத்தியதில் 13பேர் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். இதுவே 1983ம் ஆண்டு கறுப்பு யூலைக்கு வழிவகுத்தது.

கொல்லப்பட்ட இராணுவத்தினரை கொழும்புக்கு கொண்டுவந்து பொரள மலர்ச்சாலையில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்தனர். இதனால் சிங்கள மக்கள் கொதித்தெழுந்தனர். இராணுவத்தினரின் அடக்கம் முடிய தமிழ் மக்கள் சிங்களக் காடையர்களினால் அங்கேயே தாக்கப்பட்டனர்.
அதன்பின் தென்பகுதி எங்கும் தமிழ்மக்கள் சிங்களவர்களினால் தாக்கப்பட்டு அவர்களின் வீடு வாசல்கள் அழிக்கப்பட்டு சொத்துக்கள் பறிக்கப்பட்டு உயிரோடு டயர் போட்டும் எரிக்கப்பட்டனர். வெலிக்கடைச் சிறைச்சாலையையும் விட்டு வைக்கவில்லை.50க்கு மேற்பட்ட தழிழ் கைதிகள் கொடூரமான முறையில் தாக்கி அழிக்கப்பட்டனர். சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிங்களக் கைதிகளாலும், வரவழைக்கப்பட்ட காடையர்களாலுமே தமிழ்கைதிகள் கோடாலியாலும் , கத்தி பொல்லுகளாலும், கூரிய ஆயுதங்களாலும் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இதனை சிறை அதிகாரிகளும் தடுக்கவில்லை. இங்கேயே குட்டிமணி, தங்கத்துரை என்ற போராளிகளும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். நீதிமன்ற தீர்ப்பின் போது இவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டிருந்தது. தான் தூக்கில்இடப்பட்டால் தனது கண்ணை தமிழரொருவருக்க தானமாக வழங்கும்படியும் தான் தனது கண்ணால் தமிழீழம் மலர்வதைக் காணவேண்டும் என்றும் கூறியிருந்தார். இதனால் குட்டிமணியை கொடூரமாகக் கொன்றவர்கள் இந்தக் கண்ணாலே தானே தமிழீழத்தைப் பார்க்கப்போறேன் என்றாய் என்று கூறி இரு கண்களையும் தோண்டி எடுத்து மிதித்து தமது வக்கிரத்தை தீர்த்துக் கொண்டனர்.
தற்போதைய அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவும் இதன்போது அங்கே காயமடைந்தார் என பேசப்பட்டது. அப்போதய அரசு உடனடியாக ஊரடங்கை அமுல்படுத்தாமல் எல்லா அழிவுகளும் முடிந்த பின்பே ஊரடங்கை அமுலுக்கு கொண்டுவந்தது. தென்பகுதியில் இருந்த தமிழ்மக்கள் எல்லா அசையும் அசையாச் சொத்துக்களையும் இழந்து உறவுகளையும் இழந்து ஏதிலிகளாக்கப்பட்டு உடுத்த உடையுடன் கோவில்களிலும், பாடசாலைகளிலும் அகதிகளாக தங்க வைக்கப்பட்டனர். அதனை அனுபவித்த மக்கள் இன்றும் இந் நினைவில் துன்புறுவர். அதன்பின் அம் மக்கள் சொந்த இடமான வடக்கு கிழக்கிற்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அக் கலவரத்தின்போது மனித நேயம் கொண்ட சிஙகளவர் பலர் தமிழ் மக்களை தாக்குதலில் சிக்காமல் காப்பாற்றினார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கதே.

இந் நிகழ்ச்சி தமிழ் மக்கள் மனதில் வடகிழக்குதான் தங்களுக்கு பாதுகாப்பு என்று புரிய வைத்தது. இவை தான் தமிழீழம்தான் தமிழ் மக்களுக்கு சிறந்த தீர்வு என தமிழ்மக்களுக்கு எண்ண வைத்த சம்பவங்ளில் முக்கியதானது .அன்று தொடங்கிய அகதி வாழ்வு இன்னும் நீடிக்கிறது. இன்றைக்கு முற்றிலும் இராணுவமயமாக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு உட்பட இலங்கைத் தீவே பாதுகாப்பற்றதாகத் தான் உள்ளது..

மீண்ட சொர்க்கம்

Saturday, April 4, 2009 | Labels: , , , | 0 comments |

ஜெயசுக்குரு இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து இடம்பெயர்ந்த யாழ் மக்களில் வாணியும் ஒருத்தி. அவள் தன் குடும்பத்துடன் இடம்பெயர்ந்து வன்னி மண்ணில் தஞ்சமடைந்திருந்தாள். இந்த வன்னி மண் காலங்காலமாக போரின் காரணமாக இடம்பெயர்ந்த பலருக்கும் அடைக்கலப் கொடுத்த மண். போர்த்துக்கேயர் , ஒல்லாந்தர், பிரித்தானியர் காலத்திலும் யாழ்மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து வன்னியில் இடம்பெயர்தோர் பலர். 1979,1983 களில் அநுராதபுரத்தில் இருந்தும், மலையகத்தில் இருந்தும் பெரும்பான்மை இனத்தவரின் கொடூர தாக்குதலில் சிக்கி பலியானவரை விட எஞ்சிய பலர் இம்மண்ணிலே தஞ்சமடைந்தனர்.

வாணி யாழ் மண்ணைவிட்டு எங்குமே சென்றிராதவள். தன் ஒரு மகனை எறிகணைக்குப் பறிகொடுத்த சோகத்திலும் ஏனைய பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டியும் வன்னிக்கு இடம்பெயர்ந்திருந்தாள்.

                    இச் சமயத்தில்தான் , சிலநாட்களாக மாங்குளத்தில் இருந்து தொடர்ந்து வாணி இருந்த பிரதேசத்தை நோக்கி எறிகணைகள் விழுந்தனவாயிருந்தன. அதேபோல போராளிகளால் ஏவப்படும் எறிகணைகள்  கிளம்பும் சத்தமும் சதா கேட்ட வண்ணமிருந்தது. மலேரியா ஒவ்வொரு மாதமும் தாக்கி நோயில் சிக்கிய குடும்பத்தைப் பார்த்த போதும் யாழ் மண்ணின் எறிகணை குண்டு வீச்சினையும் இராணுவத்தின் தேடுதல் ,கைது என்பவற்றையும் விட இது பெரிதல்ல என்றே அவள் அதனைத் தாங்கிக் கொண்டிருந்தாள். அப்போது ஒருநாள் கிபீர் விமானம் ஒன்றுசுற்றி தாழ்ந்து அவள் வீட்டுக்கருகாமையில் குண்டு ஒன்றைப்போட்டது. அதில் இருவர் இறந்தும் அவர்கள் இருந்த குடிசை எரிந்தும் சிலர் எரிகாயங்களுக்குள்ளாகியும் இருந்தனர். இவற்றினைப் பார்த்து இங்கும் இருக்கமுடியாத நிலை வந்துவிட்டதே என்றுஎண்ணிஏங்கினாள்.

                      அப்போது அங்கே இருந்த பலர் யாழ்ப்பாணத்திற்கு சென்றனர். எனினும் கப்பல் சீராக ஓடுவதில்லை. வவுனியா ஊடாக திருகோணமலை சென்று அங்கிருந்து யாழ்ப்பாணம் வந்தடையும். இதில் லங்காமுடித்த கப்பலே முக்கியமாக பயணத்தை நடத்திக் கொண்டிருந்தது. வன்னியை விட்டு யாழ் சென்றவர்கள் தமது சொந்த இடத்தில் இருக்கவேணும் என்ற நோக்கத்திற்காகவும் ,பொருளாதாரக் கஷ்ட நிலையாலும் , அங்கே அவர்களைத் தாக்கிய நோயினாலுமே திரும்பிச் சென்றனர். வாணியின் மனமும் நாங்களும் எமது இடத்திற்குப் போவோம் என்று எண்ணி அதனைப் பிள்ளைகளிடம் கூறிளாள்.

       பிள்ளைகளோ நாங்கள் இந்த நோயினால் இறந்தாலும் அங்கே வரமாட்டோம். இராணுவம் எம்மைக் கைது செய்தால் எம்மைக் காப்பாற்றுவீர்களா?என்று கேட்டனர். கடலிலே சீருடையோடும் ரையோடும் சடலங்கள் மிதப்பதாகச் செய்தி பத்திரிக்கைகளில் வந்திருக்கு. எங்களுக்கும் இப்படியான பிரச்சினைகள் வந்தால் என்ன செய்ய முடியும் என்று கேட்டனர். எனினும் தொடர்ந்து இரவில் கேட்கும் எறிகணை வீழ்ந்து வெடிக்கும் சத்தத்தால் அங்கே இருக்க முடியவில்லை. எனவே ஒருவாறு யாழ்ப்பாணம் போவதற்குச் சம்மதித்தனர். அதற்காக அங்கே அனுமதி பெறப்பட்டது.

                 அனுமதி பெற்று ஒரு மாதத்திற்குள் பயணம் புறப்படாவிடில் அது காலாவதியாகிவிடும். எனவே அதற்குள் செல்ல திட்டமிட்டபோது அந்த நேரம் திருகோணமலைக்குச் செல்லாமல் மன்னாரில் இருந்து கப்பலில் யாழ்ப்பாணம் அனுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. மூன்றுநாட்களில் போகமுடியும் என்று கூறியோரை நம்பி மூன்றுநாட்களுக்கு தாக்குப்பிடிக்கக்கூடிய உணவுப் பொருட்களுடனும், வீட்டில் உள்ள பண்டம் பாத்திரம் புத்தகங்களுடனும் புறப்பட்டனர். குறித்த நாளில் வாகனம் ஒன்றை பலர் சேர்ந்து அமர்த்தி புறப்பட்டனர். வன்னி மக்களையும் மண்ணையும் விட்டுப் புறப்படுவது மனதிற்கு வருத்தமாய் இருந்த போதும்சொந்த மண்ணிற்குப் போகப்போகிறோம் என்ற நினைவு இனிமையாகவே இருந்தது. அழகிய காடுகளையும்,பயிர் நிலங்களையும், குடிசைகளையும், சில பெரிய வீடுகளையும் கடந்து மன்னார் நோக்கி வாகனம் புறப்பட்டது. வன்னி மண்ணிற்கு விடைகொடுத்து மன்னார் நோக்கிய பயணம் முற்றுப்பெற்றது.

                  மன்னாரில் உள்ள உயிலங்குளம் என்னும் இடத்தில் மக்கள் அதாவது மன்னாரின் இராணுவக்கட்டுப் பிரதேசத்திற்குள் செல்வதற்காக காத்திருந்தனர்.அவ்விடத்தில் எம்மை இறக்கிவிட்டு வாகனம் சென்றது. அப்போது பன்னிரண்டு பைகள் நிறைந்த பொருட்களைக் கொண்டு வந்த வாணியின் குடும்பத்தின் ஒரு பையைக் காணவில்லை. அது எப்படிக் காணாமல் போனது என்பது யாருக்குமே தெரியவில்லை. அப்போது அங்கே உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் ஆராதனை இடம் பெற்றுக்கொண்டிருந்தது. மக்கள் நூற்றுக்கணக்காக கூடியிருந்தனர். வாணியும் அவள் குடும்பத்தினரும் பாயை விரித்து ஆறியிருந்தனர். பின்பு கொண்டுவந்த உணவுப் பொதிகளை எடுத்து உண்டனர். இரவு நித்திரை வரவில்லை வாணிக்கு. அவளின் சிந்தளை பின்நோக்கிச் சென்றது.

                      வாணி யாழ் மண்ணிலே பிறந்து நான்கு சகாப்தமாய் வாழ்ந்திருந்தாள். வன்னிப்பிரதேசம் எப்படி இருக்கும் என்றோ அங்கு ஒரு காலம் வாழவேண்டிஇருக்குமென்றோ கனவு தன்னும் காணவில்லை. மேடு,பள்ளம் நிறைந்ததாயினும் வாழ்வில் இந்தளவு சோகத்தையும் வேதனையையும் எப்போதும் கண்டதில்லை. கணவன் வெளி நாடு சென்ற போதும் தன் பிள்ளைகளை போர்சூழலிலும்வாழப் பழகிக் கொண்டு சீரான வரழ்வினையே மேற்கொண்டிருந்தாள். 1995ம் ஆண்டு சூரியக்கதிர் இராணுவநடவடிக்கையை அரசாங்கம் யாழ் நகரைக் கைப்பற்றுவதற்காக மேற்கொண்டிருந்தது. அவ்வவ்போது பலாலியிலுள்ள இராணுவத்தினர் அரசாங்கம் கொடுத்திருந்த எறிகணைகளை தமிழ் மக்கள் வாழும் பகுதிக்கு  கிறிக்கற் பந்து வீசுவது போல நாலாபுறமும் வீசுவர். எது எங்கே எப்போது விழும் என்று மக்களும் அறியமுடியாதிருந்தது. எறிகணை விழும் நேரமெல்லாம் ஒவ்வொருவரும் இரவிரவாக பதுங்கு குழிகளையே நாடி தஞ்சம் கொள்வர். அதற்குள்இருக்கும்போது  தாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற நம்பிக்கை ஒவ்வொருவர் மனதிலும் இருக்கும்.

              அப்படி ஒருநாள் இராணுவத்தினர் வடமராட்சியை நோக்கி தம் எறிகணை வீச்சின் வீரத்தைக் காட்டினர். ஏதோ பயங்கர வாதிகளின் இலக்குகளை அழிக்கிறோம் எனச் சொல்லி பதுங்கியிருக்கும் மக்களைக் கொன்று குவித்தனர். இதில்தான் வாணியின் புதல்வனும் தன் செங்குருதியை மண்ணிற்கு ஈந்து அன்பு அன்னை வாணியையும், அப்பா ,சகோதரங்களையும் விட்டு விண்ணுலகு சென்றான். இதன் சோகம் தாங்காது வாணி ஏனைய பிள்ளைகளோடு என்றும் சென்றிராத வன்னி மண்ணிற்குச் சென்றாள். கிளாலி கடல் கடந்து சென்றால் அக்கடலிலேயே இறக்க வேண்டி நேரிடும் என்பதால் எப்போதும் கடல் தாண்டாத அவள் குடும்பம்  இப்போது வேறுவழியின்றி கடல் தாண்டத் துணிந்தது. ஆலங்கேணி என்னும் இடத்தில் படகுகள் தரையிறக்கி விட்டன.  அங்கேயிருந்து வன்னியின் பல இடங்களுக்கும் மக்கள் சென்றனர். வாணியும் பிள்ளைகளும் வன்னியின் ஓரிடம் சென்றனர். முன்பின் அறியாத ஒரு பாடசாலையில் லொறியில் இருந்து இவர்கள் இறக்கி விடப்பட்டனர். யாழ்குடாவில் இருந்து வந்த களைப்பு மிகுதியால் அப்படியே நித்திரையாகி விட்டனர்.மார்கழிப் பனியின் குளிரினால் தாக்கப்பட்டதை உணர்ந்த வாணி கொண்டுவந்த துணியினால் பிள்ளைகளைப் போர்த்தினாள். அடுத்த நாள் காலை அங்கே கொடுத்த தேநீரும் பாண்துண்டும் பசிமிகுதியினால் என்றும் கண்டிராத தேவரமிர்தத்தை ஒத்திருந்தது.

பின்பு தெரிந்த சிலரால் ஒரு வீட்டில் சேர்க்கப்பட்டு அங்கிருந்தாள். வன்னி வளம் மிகுந்ததாயினும் மலேரியா நுளம்பு அங்கே தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கியது. எங்கே பார்த்தாலும் நோய். ஒவ்வொரு குடும்பத்திலும் , ஒருவரை ஒருவர் பார்க்கக் கூட ஆளில்லாது எல்லோரும் நோய்வாய்பட்டனர். ஆஸ்பத்திரிக்குச்செல்வதற்கு வாகனங்களுக்குக் கூட எரிபொருள் இல்லை. நோயோடு நடந்து சென்று மருந்து வாங்கி வந்தவர்கள் அடுத்தநாள் இறந்ததையும் வாணி அறிவாள். ஆஸ்பத்திரிகளில் நோயாளர் இருப்பதற்குக் கூட இடம் இல்லை. சைக்கிளில்தான் செல்லலாம் ஆனால் சைக்கிளில் செல்வதற்கு சைக்கிள் ஓட்டத் தெம்பில்லை. உதவி செய்யும் உள்ளம் படைத்த வன்னி மக்களிடையே ஓரிருவர் உபத்திரவமும் செய்தனர் என்பதையும் மறுக்கமுடியாது.

அங்கே தண்ணீர் இன்மை மிகவும் கஷ்டமாய் இருந்தது. பக்கத்திலே தண்ணீருக்குப் போனால் தங்கள் கிணற்றிலே தண்ணீருக்கு வரவேண்டாம் என்று சொல்பவரும் உண்டு. அதனால் குளிக்காமல் கூட நிறைய நாள் இருக்க வேண்டியும் இருந்தது. இத்தனை கஸ்டங்கள் இருந்த போதும் திரும்பவும் சொந்த மண்ணிற்குத் திரும்ப விருப்பம் வரவில்லை. இப்படியே பின்நோக்கி சிந்தனை வயப்பட்டிருந்த வாணியின் சிந்தனையை எல்லோரும் சென்றிப் பொயின்றுக்குப் போகின்றார்கள் என்ற சொல் கலைத்தது. அதைக் கேட்டு தானும் கொண்டு வந்த சாமான்களையும் தூக்கிக் கொண்டு அவ் இடத்திற்குச் சென்று காத்திருந்தாள்.

              சூரியன் தன் கதிர்களில் வெம்மையை வீசிக் கொண்டிருந்த போது மக்களை இராணுவ சூனியப் பிரதேசத்திற்கச் செல்ல  போராளிகள் அனுமதித்திருந்தனர். கம்பி வேலிக்குள்ளால் தம் பயண அனுமதியைக்காட்டி செல்ல வேண்டி இருந்ததால் ஒவ்வொருவரும் முதல் செல்லுவதற்காகப் போராடிக் கொண்டிருந்தனர். ஒருவாறு அந்தப் போராட்டத்தில் வெற்றியீட்டியோர் வெற்றிக்களிப்போடு பொதிகளைச் சுமந்த வண்ணம்முன்னே செல்ல கிரிசாம்பாள் போன்று வாணியும் பிள்ளைகளும் சிரமத்தின் மத்தியில் பின்னே சென்றனர்.              

               அங்கே இராணுவத்தினசின் சோதனைக்காக சுட்டெரிக்கும் வெயிலில் , வயல் வெளிகளில் மக்கள் வரிசையில் நின்றனர்.  இவர்களும் சென்று அவ்வரிசையில் இணைந்து கொண்டனர். அவர்களின் சோதனை முடிய பிற்பகல் நான்கு மணியானது. அதன் பின் ஏதோவெல்லாம் பதிந்து பஸ்சில் ஏற்றி ஒரு பாடசாலையில் கொண்டுபோய் விட்டனர். அன்றிரவு அப்பாடசாலையில்  தங்க வேண்டியிருந்தது. வெட்ட வெளியில் வானமே கூரையாக பூமியே படுக்கையாக அவ்விரவு கழிந்தது.

             அடுத்தநாள் உங்களை எருக்கலம்பிட்டிக்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறி , மீண்டும் சோதனை , கியூவரிசை என்றெல்லாம் சோதித்து பின்பு பஸ் வண்டியில் ஏற்றி இன்னொரு பாடசாலையில் இறக்கிவிட்டனர். அங்கே முதலில் வந்தவர்கள் இடம்பிடித்து வைத்திருந்தனர். பாடசாலை கட்டிட வாசலை அண்மித்த இடத்தில் களைப்பின் மிகுதியால் சிறிது இருப்போம் என்று தான் கொண்டுவந்த பொதியை அவ்விடத்தில் வைத்தான். அங்கே இருந்தவர்கள் இது எங்கள் இடம் இங்கே வைக்க வேண்டாம் என்று கூற அவள் மகனுக்குக் கோபம் வந்துவிட்டது. அம்மா நாங்கள் இப்படியெல்லாம் சீரழிய வேண்டுமா?என்று கூறி இதைவிட யதழ்ப்பாணத்திலேயே இறந்திருக்கலாம் என்று வேதனைப்பட்டான். அதைப்பார்த்து கலங்கிய வாணி எம் இனத்தின் செயற்பாடு இந்த நேரத்தில் கூட குறுகலாயுள்ளதே என்று நொந்தாள். சிலர் பாடசாலைக் கட்டிடத்தின் மேல்மாடியில் ஒரு இடத்தில் இருக்கச் சொன்னார்கள். மூட்டை முடிச்சுக்களோடு சிறுபிள்ளைகள் படிகளில் செல்வதைப் பார்க்க , இந்தக் காட்சிகளைப் பார்க்க ஏன்தான் இந்தக்கண்கள் இருந்தன என்று தோன்றியது வாணிக்கு.

                 மூன்று நாட்களில் யாழ்ப்பாணம் செல்லலாம் என்று வந்தவர்களுக்கு இருபது நாட்கள் சென்ற போதும் பயணம் செல்லமுடியவில்லை. கப்பல்கள் சீராக ஓடாமல் பயணமும் பிந்திப் போனது.பின்பு பேசாலைக்குச் சென்று அங்கிருந்து கப்பலில் யாழ்ப்பாணம் போவதற்கு ஆயத்தப்படுத்தப்பட்டு பேசாலைக்குச் சென்றனர். அங்கேயும் சிறிது நாள் தங்க வேண்டி இருந்தது. பயணம் செல்ல வந்தவர்களே அங்கு இறந்து விட்டிருந்தமையும் வாணியின் மனதை வெகுவாகப் பாதித்தது. ஒருவாறு ஒரு கப்பலில் பயணம் செய்யும் நேரம் கிட்டியது. அங்கும் பொதிகள் சோதனை உடற் சோதனை என்பன செய்யப்பட்டன. பின்பு சிறு படகில் சென்று நடுக்கடலில் உள்ள கப்பலில் ஏற்றினார்கள். கப்பலும் காங்கேசன் துறைமுகத்தை நோக்கிப் பயணமானது. பயணத்தின்போது கடலைத்தவிர வேறொன்றும் தெரியவில்லை. துறைமுகத்தை அன்டியபோது தான் அதன் கரை தெரிந்தது. பின்பு ஒது கட்டிடத்தில் கொண்டு வந்து விட்டனர். யாழ் மண்ணில் வந்துவிட்டோம் என்ற நினைப்பே ஒரு சுகத்தையும், மகிழு்ச்சியையும் தந்தது வாணிக்கு . அங்கே வீசிய காற்று புதிய சுகந்தத்தைக் கொடுத்தது அவளுக்கு. நீர் நிரப்பி இருந்த தொட்டியில் மனமாரக் குளிக்க முடிந்தது அவளால். அப்போது அவள் தான் இழந்து விட்டதையெல்லாம் பெற்றதுபோல் உணந்ந்தாள். அடுத்த நாள் காலை மீண்டும் பஸ்களில்ஏற்றி அவரவர் ஊர்களுக்கு அனுப்பினர்.

               காங்கேசன்துறை எனும் இடம் முட்களும் புதர்களும்  மண்டியதாகவும் இராணுவம் மட்டுமே உள்ளதாகவும் தெரிந்தது. உடைந்த இடிந்த கட்டிடங்களும் தரைமட்டமான வீடுகளும் சன்னங்கள் பதிந்த சுவர்களும் பார்ப்பதற்கு வேதனையாய் இருந்தது. தெல்லிப்பழையின் பின்பு வந்த பிரதேசத்திலேயே மக்களைக் காணக்கூடியதாய் இருந்தது. பின்பு வடமராட்சி நோக்கி பிரயாணம் மேற்கொண்ட வாணியும் பிள்ளைகளும் வீதியோரமிருத்த அழிந்த வீடுகளையும் இராணுவ சென்றிகளையும் பார்த்து பிரமித்தனர். யாழ் மண் இரரணுவமயமாக இருந்தது. தனது வீட்டின் முன் வந்து நின்ற வாகனத்தில் இருந்து இறங்கிய வாணி தாயினைக் கண்ட மகவு போல் தன் வீட்டு முற்றத்திலே குந்தினாள். மீண்ட சொர்க்கமாய் அவள் உள்ளம் மலர்ந்தது.

வன்னியில் சிக்கியது யார்?

Wednesday, March 25, 2009 | Labels: , | 0 comments |

நாம் இப்போது அடிக்கடி வானொலி, தொலைக்காட்சி என்பவற்றில் கேட்கும், பார்க்கும் செய்திகளில் ஒரு செய்தி மிகவும் முக்கியப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வன்னியில் சிக்கியுள்ள மக்களை மீட்க வேண்டும். இதற்கு புலிகள் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்பதாகும். இவர்கள் யார்? ஏன் சிக்கினார்கள்? பிளேனில் பயணிக்கும் பயணிகளை தீவிரவாதிகள் கடத்தி தம் கோரிக்கைகளை நிறைவேற்ற பயணக் கைதிகளாக வைத்திருப்பர். அவர்களை விடுவிக்க சம்பந்தப்பட்ட நாடுகள் எல்லாம் ஒரே குரலாக வேண்டுகோள் விடுப்பர். பயணக் கைதிகள் சிக்கியது போன்றுதான் வன்னி மக்களும் சிக்கியுள்ளார்களா? இல்லையே. இவர்கள் தாமாகத்தானே அங்கே இருக்கின்றனர்.

               இந்த மக்களில் அநேகர் காலங்காலமாக வன்னியில் இருந்த பரம்பரைக் குடியினர். சிலர் அநுராதபுரத்தில் ஏற்பட்ட இனப்பிரச்சினையின் போது பாதுகாப்புத்தேடி புலம்பெயர்ந்த தமிழர். இன்னும் சிலர் மலையகத்தில் 1983ம் ஆண்டு ஏற்பட்ட பிரச்சினையின் போது புலம்பெயர்ந்து வன்னியில் வாழும் மலையகத்தமிழர். வேறு சிலர்,விவசாய நடவடிக்கைக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தவர்களும் ,1995ல் இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபோது அங்கிருந்து வெளியேறி அடைக்கலம் புகுந்தவர்களுமாகும்.. இவர்கள் பல கஸ்டங்களை அனுபவித்தபோதும்,  இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்வதை விட இது தமக்குப் பாதுகாப்பு என்ற சிந்தனை உடையவர்கள்.

             இவர்கள் என்ன செய்தார்கள்? இராணுவத்தினர் ஒவ்வோர் இடமாக நிலத்தினைக் கைப்பற்றிய போது அந்த இடங்களை விடுத்து பாதுகாப்புத்தேடி மன்னார் முருங்கன், உயிலங்குளம், மல்லாவி, துணுக்காய், வவுனிக்குளம், மாங்குளம், ஒட்டிசுட்டான், முறிகண்டி, கிளிநொச்சி, இரணைமடு, பரந்தன் ,பூநகரி இப்படியே எல்லா இடமாக ஓடியோடி பாதுகாப்புத்தேடி ஓட முடியாமல் இன்று ஓரிடத்தில் தரித்து நிற்க வேண்டியவர்களாயினர். இவர்கள்தான் சிக்கிய மக்கள். இவர்கள் இவ்வளவு தூரம் ஓடும்போதும் இராணுவத்திடம் பாதுகாப்புக் கிடைக்கும் என்று எந்த நேரத்திலும் அவர்களிடம் வந்ததில்லையே. போராளிகள் அந்த மக்களை துன்புறுத்தினாலோ, காயப்படுத்தினாலோ, கொலை செய்தாலோ மக்கள் அவர்களுடன் சென்றிருப்பார்களா? இராணுவம் தமக்குப் பாதுகாப்புத் தரும் என்று ஒரு போதும் மக்கள் நம்பவில்லை, நம்பவும் மாட்டார்கள். நம்பியிருந்தால் எப்போவோ இவர்களிடம் வந்திருப்பார்கள்.

          கடைசி நேரத்தில் வரும் மக்கள் ஏன் வருகிறார்கள்? செல்லினாலும், குண்டுமழையினாலும் ஒவ்வொரு நாளும் காயப்படும், இறக்கும் மக்களைப் பாரக்கிறார்கள். அவர்களும் அதை அனுபவிக்கிறார்கள். நோய்கள் ,மருந்தின்மை, உணவின்மை, குண்டுச்சத்தங்கள் அதனால் நித்திரையின்மை இருக்க இடமின்மை என்று இவர்களுக்க ஏற்பட்ட அழுத்தங்கள் எண்ணிலடங்கா. எனவே இப்படி வாழ்றதைவிட வெளியே சென்று சாவது மேல் என்ற விரக்தி நிலையிலேயே மக்கள் வருகிறார்கள் என்பதுதான் உண்மை.

       மனிதாபிமான நடவடிக்கை என்கிறார்களே எது மனிதாபிமான நடவடிக்கை?. 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உலக நாடுகள் எல்லாம் முன்வந்து உதவி அளித்தன. அது மனிதாபிமானம்.  எமது நாட்டுக்கும் உதவி அளித்தன. இதனால் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தறை, காலி என்ற பல இடங்களில் பாடசாலைகள் வீடுகள் , ஆஸ்பத்திரிகள் என்பன கட்டி அவர்களுக்கு கொடுத்து சிறிது ஆறுதல் அளித்தனர். அது மனிதாபிமானப் பணிதான். அதே சுனாமி அலை வன்னி மக்களை விட்டு வைத்ததா? இல்லை. முல்லைத்தீவு, புதுக்குடியிர்ப்பு, வடமராட்சி கிழக்கு, மன்னார் என எல்லா இடமும் தன் தடத்தைப் பதித்துச் சென்றது. குடும்பம் குடும்பமாக அநேகர் இறந்தனர். நூற்றுக் கணக்கானோரை ஒரே குழியில் போட்டுப் புதைத்ததை மனிதாபிமான நடவடிக்கை செய்பவர் அறிய வில்லையா? அல்லது காணவில்லையா?

மீதியாக மிஞ்சி நிற்கும் மக்களைத்தான் இன்று கொன்று குவித்தும் காயமடையச் செய்தும் சிக்கிய மக்களை மீட்கின்றனர். விழுந்தவனை மாடேறி மிதித்த கதை இதுதான். இவர்கள்தான் சிக்கிய மக்கள். சொல்லொணாதட துயரில் அவர்கள். வெறிறிக்களிப்பில் இவர்கள்!.

வன்னி வாழ்வின் சில நாட்கள்

Friday, March 20, 2009 | Labels: , , , | 0 comments |

1995ம் ஆண்டு யாழ்குடாநாட்டு இடம்பெயர்வின் போது நாமும் வன்னிக்கு இடம்பெயர்ந்தோம். அதற்கு முன் A9 பாதையால் பயணித்தேனே தவிர வன்னி வாழ்வு பற்றி அறிந்திருக்கவில்லை. முதன் முதல் சென்று வாழ வேண்டிய சந்தர்ப்பம் இப்போதுதான் கிடைத்தது. கிளாலிக்கடனேரி வழியாகப் பயணம் செய்து வன்னிக்குள் பிரவேசிக்க மாலையானதால் தரைப் பயணம் இரவிலேயே அமைந்தது. அதனால் பெரிதாக இடங்களைப் பார்க்க முடியவில்லை.

குறித்த கிராமத்திற்குச் சென்றோம். அங்கே ஒரு பாடசாலையில் விட்டிருந்தார்கன்.மற்ற நாள் தெரிந்த ஒருவர் வந்து முதலே சொல்லியிருந்த வீட்டிற்கு கூட்டிச் சென்று விட்டார்.அப்போது தான் வன்னி நிலப்பரப்பை பார்க்கமுடிந்தது. நிலப்பரப்பின் விரிவான தன்மையும் விவசாய நிலமும் சின்னஞ் சிறுவீடுகளும் ஒவ்வொரு திக்கிலுமாய் இருந்நதைப் பார்த்தேன்.

சிலநாட்கள் செல்ல வெளியில் சென்ற சந்தர்ப்பங்களில் அங்கே போவோர் வருவோரில் பெரும்பாலானவர்கள் டவலால் தம்மைப் போர்த்தியிருந்தார்கள். எனக்கு அப்போது ஏன் என்பது விளங்கவில்லை. போகப் போகத்தான் வினங்கியது அவர்கள் எல்லாம் மலேரியாக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்கள் என்பது.கொஞ்ச நாட்களின் பின் அந்த மலேரியா எம்மையும் பீடித்து நாமும் டவலால் போர்த்தி ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டிய நிலை வந்தது. வாகன வசதி இல்லாததாலும் ஆஸ்பத்திரிக்குச் செல்வது தூரமாக இருந்ததாலும் தான் போர்க்கவேண்டிய தேவை இருந்தது என்பதை பின்னரல் உணரக் கூடியதாய் இருந்தது.

அங்கே காய்ச்சல் உள்ளவர்கள் எல்லோருக்கும் குளோரோக்குயின் பிறிமாக்குயின் என்ற குளிகைகள் தரப்பட்டன. அறிகுறியைக்கேட்டு எந்தவித இரத்தப் பரிசோதனையும் இல்லாமலே தரப்பட்டது. ஏனெனில் இங்கே வரும் காய்ச்சல் மலேரியாதான் என உறுதியாக நம்பப்பட்டது. மாதம் மாதம் ஒவ்வொருவருக்கும் மலேரியா வருவது நிச்சயமானது. மலேரியா நெருப்புக்காச்சல் வயிற்றோட்டம் என நோய்கள் மலிந்திருந்தன. யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள்தான் இந்த நோயினால் அதிகம் பீடிக்கப்படுவார்கள். அங்கே தொடர்ந்து இருந்தவர்கள் அவ்வளவாகப் பீடிக்கப்படுவதில்லை. அப்படி மலேரியா வந்தாலும் எம்மைப்போல் அவர்கள் கஸ்டப்படுவதில்லை. ஏனெனில் அது அவர்களுக்குப் பழக்கப்பட்டது. தாமாகவே குளிகைகளைப்போட்டுவிட்டு தங்கள் வேலைகளைச் செய்வார்கள். இக் காய்ச்சலுக்கு அறிகுறி நடுக்கத்துடனான காய்ச்சல். வாந்தி தலையிடி என்பனவாகும்.

ஒருநாள் நல்ல மழை பெய்தது. வீட்டிற்குள் இருந்தோம்.  அப்போது சுவரில் ஒரு இடத்தில் தேள் நின்றது. அதை அடிக்க முயன்ற போது அதே சுவரில் இன்னோர் இடத்திலும் தேள் நின்றது. ஒன்றைஅடிக்க அதன் அதிர்வில் மற்றையது ஓடிவிடும் என்பதால் ஒவ்வொருவர் தடியை வைத்து ஒரே நேரத்தில் அடித்தோம்.  அதே நேரம் ஓலையில் ஒரு அசைவு தெரிந்தது. அங்கே பார்த்தபோது புலிமுகச்சிலந்தி இருந்தது. சரி இதை விட்டு வைத்தால் இரவு நித்திரை கொள்ளமுடியாதென நினைத்து அதுவும் ஓலைக்குள் ஒழிய ஒழிய ஒருவாறு அடித்துவிட்டோம். நாங்கள் வன்னிக்கு வந்ததே நித்திரை கொள்ள முடியாமல் தவித்ததால் தான். அதுவேஇங்கு வேறுவிதத்தில் அமைந்தது.

ஒரு நாள் சமையல் வேலையில் ஈடுபட்டிருக்கும் போது காலுக்கடியில் ஏதோ போவது போல் இருந்தது. அங்கே பூனையும் இருந்ததால் பூனையென எண்ணி ஏதோ போகுது என்று சொல்லிப் பார்த்தால் அது பாம்பு போல் இருந்தது. அதைச் சரியாகப் பார்க்க முதல் வெளியே போனது. அங்கே இருந்தவர்கள் அது போகுமிடத்தைப் பார்த்தபோது ஒரு தகரத்தின் கீழே ஒழித்திருந்தது. அதை அசைத்து வெளியேறப் பண்ணி அதை அடித்தனர். அதிலிருந்து கருநீலமான இரத்தம் வெளியேறீயது. அப்போதும் அதைப்பாம்பு என்றுதான் நினைத்திருந்தோம். பின்பு அங்கே யே வாழ்ந்து வருபவர்களைக் கேட்டபோது இது பாம்பு இல்லை திருநீலகண்டன் என்றனர். இதன் ஒவ்வொரு கோட்டிற்கும் ஒவ்வொரு விஷம் கடித்தால் அவ்வளவுதான் அதுதான் முடிவு என்றார்கள். அப்படியா என்று அதிர்ச்சியாய் இருந்தது.

இதைவிட ஒருநாள் பாம்பு ஒன்று வந்து கப்பின்{வீட்டைத்தாங்கும்மரம்} மேல் இருந்தது. அதைக்கண்டு துரத்தினோம் ஆனால் அது வெளியே போனதைக் காணவில்லை. உள்ளேயும் இல்லை. இரவு படுக்கும்போது பாம்பு வந்து கடித்துவிடும் என்று நினைத்து ஒருவர் மாறி  ஒருவர் 3மணித்தியாலத்திற்கு ஒரு தடவை காவல் காப்பது என்ற ஒப்பந்தத்தோடு விழித்திருந்தோம்.டோச் குப்பி விளக்கு, அரிக்கன்லாம்பு, இவைதான் எமக்கு ஒளிதருபவை. டோச்அடிச்சு  கூரையை பார்த்துப் பார்த்து பாம்பு இல்லை. மூன்றாவது சாமம் அளவில் எல்லோரும் ஒப்பந்தத்தை மறந்து நித்திரை. விடிந்தபோது தான் தெரியும் அங்கே எல்லோரும் நித்திரையானது. உடனே பாம்பு வந்ததா என படுக்கையை தூக்கிக் பார்த்த பின்தான் நிம்மதியாய் இருந்தது.

மழைநேரத்தில் கால் துடைக்க வாசலில் சாக்குப் போடுவது வழக்கம். விடிய எழும்பிப் பார்த்தால் அதன் கீழ் மழைக்கு ஒதுங்கி பாம்பு இருக்கும். இது என்ன இங்கு மனிதர் இருக்க முடியாமல் உள்ளதே என்று புலம்பினால் காட்டு விலங்குகள் பாம்புகள் இருக்கும் இடத்தை நீங்கள் ஆக்கிரமித்து விட்டு இப்படிக் சொல்கிறீர்கள் என்பார்கள். இரவு இன்னொரு நாள் நல்ல நித்திரை. ஏதோ மேலே இருந்து விழுந்ததுபோல் இருந்தது.எல்லோரும் ஒரே இடத்தில் கிழங்கடிக்கின மாதிரி படுத்திருப்பதுதான் வழக்கம். உடனே எல்லோரையும் எழுப்பிபார்த்த போது முதல் பார்த்த திருநீலகண்டன். அடிப்பதற்கு ஆயத்தமாக பக்கத்தில் எப்பாதும் தடிகள் வைத்திருப்போம்.  ஓடிவிடும் என்பதால் தலையணை படுக்கை விரிப்பு எல்லாம் அப்படியே இருக்க ஓரே அடி.திருநீலகண்டர் சரி.

அப்படியே எல்லாவற்றையும் வெளியில் போட்டு விட்டுப்படுத்தோம்.

              இப்படியாக வன்னியில் இருந்த அதிகமான நாட்கள் நோயிலும், பயத்திலும் ,துன்பத்திலும் கழிய மனதில் வேதனையே மிஞ்சியது. எனவே, சொந்த இடமான யாழ்ப்பாணத்துக்கு புறப்பட ஆயத்தமானோம்.