வன்னியில் சிக்கியது யார்?

Wednesday, March 25, 2009 | Labels: , | 0 comments |

நாம் இப்போது அடிக்கடி வானொலி, தொலைக்காட்சி என்பவற்றில் கேட்கும், பார்க்கும் செய்திகளில் ஒரு செய்தி மிகவும் முக்கியப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வன்னியில் சிக்கியுள்ள மக்களை மீட்க வேண்டும். இதற்கு புலிகள் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்பதாகும். இவர்கள் யார்? ஏன் சிக்கினார்கள்? பிளேனில் பயணிக்கும் பயணிகளை தீவிரவாதிகள் கடத்தி தம் கோரிக்கைகளை நிறைவேற்ற பயணக் கைதிகளாக வைத்திருப்பர். அவர்களை விடுவிக்க சம்பந்தப்பட்ட நாடுகள் எல்லாம் ஒரே குரலாக வேண்டுகோள் விடுப்பர். பயணக் கைதிகள் சிக்கியது போன்றுதான் வன்னி மக்களும் சிக்கியுள்ளார்களா? இல்லையே. இவர்கள் தாமாகத்தானே அங்கே இருக்கின்றனர்.

               இந்த மக்களில் அநேகர் காலங்காலமாக வன்னியில் இருந்த பரம்பரைக் குடியினர். சிலர் அநுராதபுரத்தில் ஏற்பட்ட இனப்பிரச்சினையின் போது பாதுகாப்புத்தேடி புலம்பெயர்ந்த தமிழர். இன்னும் சிலர் மலையகத்தில் 1983ம் ஆண்டு ஏற்பட்ட பிரச்சினையின் போது புலம்பெயர்ந்து வன்னியில் வாழும் மலையகத்தமிழர். வேறு சிலர்,விவசாய நடவடிக்கைக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தவர்களும் ,1995ல் இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபோது அங்கிருந்து வெளியேறி அடைக்கலம் புகுந்தவர்களுமாகும்.. இவர்கள் பல கஸ்டங்களை அனுபவித்தபோதும்,  இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்வதை விட இது தமக்குப் பாதுகாப்பு என்ற சிந்தனை உடையவர்கள்.

             இவர்கள் என்ன செய்தார்கள்? இராணுவத்தினர் ஒவ்வோர் இடமாக நிலத்தினைக் கைப்பற்றிய போது அந்த இடங்களை விடுத்து பாதுகாப்புத்தேடி மன்னார் முருங்கன், உயிலங்குளம், மல்லாவி, துணுக்காய், வவுனிக்குளம், மாங்குளம், ஒட்டிசுட்டான், முறிகண்டி, கிளிநொச்சி, இரணைமடு, பரந்தன் ,பூநகரி இப்படியே எல்லா இடமாக ஓடியோடி பாதுகாப்புத்தேடி ஓட முடியாமல் இன்று ஓரிடத்தில் தரித்து நிற்க வேண்டியவர்களாயினர். இவர்கள்தான் சிக்கிய மக்கள். இவர்கள் இவ்வளவு தூரம் ஓடும்போதும் இராணுவத்திடம் பாதுகாப்புக் கிடைக்கும் என்று எந்த நேரத்திலும் அவர்களிடம் வந்ததில்லையே. போராளிகள் அந்த மக்களை துன்புறுத்தினாலோ, காயப்படுத்தினாலோ, கொலை செய்தாலோ மக்கள் அவர்களுடன் சென்றிருப்பார்களா? இராணுவம் தமக்குப் பாதுகாப்புத் தரும் என்று ஒரு போதும் மக்கள் நம்பவில்லை, நம்பவும் மாட்டார்கள். நம்பியிருந்தால் எப்போவோ இவர்களிடம் வந்திருப்பார்கள்.

          கடைசி நேரத்தில் வரும் மக்கள் ஏன் வருகிறார்கள்? செல்லினாலும், குண்டுமழையினாலும் ஒவ்வொரு நாளும் காயப்படும், இறக்கும் மக்களைப் பாரக்கிறார்கள். அவர்களும் அதை அனுபவிக்கிறார்கள். நோய்கள் ,மருந்தின்மை, உணவின்மை, குண்டுச்சத்தங்கள் அதனால் நித்திரையின்மை இருக்க இடமின்மை என்று இவர்களுக்க ஏற்பட்ட அழுத்தங்கள் எண்ணிலடங்கா. எனவே இப்படி வாழ்றதைவிட வெளியே சென்று சாவது மேல் என்ற விரக்தி நிலையிலேயே மக்கள் வருகிறார்கள் என்பதுதான் உண்மை.

       மனிதாபிமான நடவடிக்கை என்கிறார்களே எது மனிதாபிமான நடவடிக்கை?. 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உலக நாடுகள் எல்லாம் முன்வந்து உதவி அளித்தன. அது மனிதாபிமானம்.  எமது நாட்டுக்கும் உதவி அளித்தன. இதனால் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தறை, காலி என்ற பல இடங்களில் பாடசாலைகள் வீடுகள் , ஆஸ்பத்திரிகள் என்பன கட்டி அவர்களுக்கு கொடுத்து சிறிது ஆறுதல் அளித்தனர். அது மனிதாபிமானப் பணிதான். அதே சுனாமி அலை வன்னி மக்களை விட்டு வைத்ததா? இல்லை. முல்லைத்தீவு, புதுக்குடியிர்ப்பு, வடமராட்சி கிழக்கு, மன்னார் என எல்லா இடமும் தன் தடத்தைப் பதித்துச் சென்றது. குடும்பம் குடும்பமாக அநேகர் இறந்தனர். நூற்றுக் கணக்கானோரை ஒரே குழியில் போட்டுப் புதைத்ததை மனிதாபிமான நடவடிக்கை செய்பவர் அறிய வில்லையா? அல்லது காணவில்லையா?

மீதியாக மிஞ்சி நிற்கும் மக்களைத்தான் இன்று கொன்று குவித்தும் காயமடையச் செய்தும் சிக்கிய மக்களை மீட்கின்றனர். விழுந்தவனை மாடேறி மிதித்த கதை இதுதான். இவர்கள்தான் சிக்கிய மக்கள். சொல்லொணாதட துயரில் அவர்கள். வெறிறிக்களிப்பில் இவர்கள்!.

வன்னி வாழ்வின் சில நாட்கள்

Friday, March 20, 2009 | Labels: , , , | 0 comments |

1995ம் ஆண்டு யாழ்குடாநாட்டு இடம்பெயர்வின் போது நாமும் வன்னிக்கு இடம்பெயர்ந்தோம். அதற்கு முன் A9 பாதையால் பயணித்தேனே தவிர வன்னி வாழ்வு பற்றி அறிந்திருக்கவில்லை. முதன் முதல் சென்று வாழ வேண்டிய சந்தர்ப்பம் இப்போதுதான் கிடைத்தது. கிளாலிக்கடனேரி வழியாகப் பயணம் செய்து வன்னிக்குள் பிரவேசிக்க மாலையானதால் தரைப் பயணம் இரவிலேயே அமைந்தது. அதனால் பெரிதாக இடங்களைப் பார்க்க முடியவில்லை.

குறித்த கிராமத்திற்குச் சென்றோம். அங்கே ஒரு பாடசாலையில் விட்டிருந்தார்கன்.மற்ற நாள் தெரிந்த ஒருவர் வந்து முதலே சொல்லியிருந்த வீட்டிற்கு கூட்டிச் சென்று விட்டார்.அப்போது தான் வன்னி நிலப்பரப்பை பார்க்கமுடிந்தது. நிலப்பரப்பின் விரிவான தன்மையும் விவசாய நிலமும் சின்னஞ் சிறுவீடுகளும் ஒவ்வொரு திக்கிலுமாய் இருந்நதைப் பார்த்தேன்.

சிலநாட்கள் செல்ல வெளியில் சென்ற சந்தர்ப்பங்களில் அங்கே போவோர் வருவோரில் பெரும்பாலானவர்கள் டவலால் தம்மைப் போர்த்தியிருந்தார்கள். எனக்கு அப்போது ஏன் என்பது விளங்கவில்லை. போகப் போகத்தான் வினங்கியது அவர்கள் எல்லாம் மலேரியாக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்கள் என்பது.கொஞ்ச நாட்களின் பின் அந்த மலேரியா எம்மையும் பீடித்து நாமும் டவலால் போர்த்தி ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டிய நிலை வந்தது. வாகன வசதி இல்லாததாலும் ஆஸ்பத்திரிக்குச் செல்வது தூரமாக இருந்ததாலும் தான் போர்க்கவேண்டிய தேவை இருந்தது என்பதை பின்னரல் உணரக் கூடியதாய் இருந்தது.

அங்கே காய்ச்சல் உள்ளவர்கள் எல்லோருக்கும் குளோரோக்குயின் பிறிமாக்குயின் என்ற குளிகைகள் தரப்பட்டன. அறிகுறியைக்கேட்டு எந்தவித இரத்தப் பரிசோதனையும் இல்லாமலே தரப்பட்டது. ஏனெனில் இங்கே வரும் காய்ச்சல் மலேரியாதான் என உறுதியாக நம்பப்பட்டது. மாதம் மாதம் ஒவ்வொருவருக்கும் மலேரியா வருவது நிச்சயமானது. மலேரியா நெருப்புக்காச்சல் வயிற்றோட்டம் என நோய்கள் மலிந்திருந்தன. யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள்தான் இந்த நோயினால் அதிகம் பீடிக்கப்படுவார்கள். அங்கே தொடர்ந்து இருந்தவர்கள் அவ்வளவாகப் பீடிக்கப்படுவதில்லை. அப்படி மலேரியா வந்தாலும் எம்மைப்போல் அவர்கள் கஸ்டப்படுவதில்லை. ஏனெனில் அது அவர்களுக்குப் பழக்கப்பட்டது. தாமாகவே குளிகைகளைப்போட்டுவிட்டு தங்கள் வேலைகளைச் செய்வார்கள். இக் காய்ச்சலுக்கு அறிகுறி நடுக்கத்துடனான காய்ச்சல். வாந்தி தலையிடி என்பனவாகும்.

ஒருநாள் நல்ல மழை பெய்தது. வீட்டிற்குள் இருந்தோம்.  அப்போது சுவரில் ஒரு இடத்தில் தேள் நின்றது. அதை அடிக்க முயன்ற போது அதே சுவரில் இன்னோர் இடத்திலும் தேள் நின்றது. ஒன்றைஅடிக்க அதன் அதிர்வில் மற்றையது ஓடிவிடும் என்பதால் ஒவ்வொருவர் தடியை வைத்து ஒரே நேரத்தில் அடித்தோம்.  அதே நேரம் ஓலையில் ஒரு அசைவு தெரிந்தது. அங்கே பார்த்தபோது புலிமுகச்சிலந்தி இருந்தது. சரி இதை விட்டு வைத்தால் இரவு நித்திரை கொள்ளமுடியாதென நினைத்து அதுவும் ஓலைக்குள் ஒழிய ஒழிய ஒருவாறு அடித்துவிட்டோம். நாங்கள் வன்னிக்கு வந்ததே நித்திரை கொள்ள முடியாமல் தவித்ததால் தான். அதுவேஇங்கு வேறுவிதத்தில் அமைந்தது.

ஒரு நாள் சமையல் வேலையில் ஈடுபட்டிருக்கும் போது காலுக்கடியில் ஏதோ போவது போல் இருந்தது. அங்கே பூனையும் இருந்ததால் பூனையென எண்ணி ஏதோ போகுது என்று சொல்லிப் பார்த்தால் அது பாம்பு போல் இருந்தது. அதைச் சரியாகப் பார்க்க முதல் வெளியே போனது. அங்கே இருந்தவர்கள் அது போகுமிடத்தைப் பார்த்தபோது ஒரு தகரத்தின் கீழே ஒழித்திருந்தது. அதை அசைத்து வெளியேறப் பண்ணி அதை அடித்தனர். அதிலிருந்து கருநீலமான இரத்தம் வெளியேறீயது. அப்போதும் அதைப்பாம்பு என்றுதான் நினைத்திருந்தோம். பின்பு அங்கே யே வாழ்ந்து வருபவர்களைக் கேட்டபோது இது பாம்பு இல்லை திருநீலகண்டன் என்றனர். இதன் ஒவ்வொரு கோட்டிற்கும் ஒவ்வொரு விஷம் கடித்தால் அவ்வளவுதான் அதுதான் முடிவு என்றார்கள். அப்படியா என்று அதிர்ச்சியாய் இருந்தது.

இதைவிட ஒருநாள் பாம்பு ஒன்று வந்து கப்பின்{வீட்டைத்தாங்கும்மரம்} மேல் இருந்தது. அதைக்கண்டு துரத்தினோம் ஆனால் அது வெளியே போனதைக் காணவில்லை. உள்ளேயும் இல்லை. இரவு படுக்கும்போது பாம்பு வந்து கடித்துவிடும் என்று நினைத்து ஒருவர் மாறி  ஒருவர் 3மணித்தியாலத்திற்கு ஒரு தடவை காவல் காப்பது என்ற ஒப்பந்தத்தோடு விழித்திருந்தோம்.டோச் குப்பி விளக்கு, அரிக்கன்லாம்பு, இவைதான் எமக்கு ஒளிதருபவை. டோச்அடிச்சு  கூரையை பார்த்துப் பார்த்து பாம்பு இல்லை. மூன்றாவது சாமம் அளவில் எல்லோரும் ஒப்பந்தத்தை மறந்து நித்திரை. விடிந்தபோது தான் தெரியும் அங்கே எல்லோரும் நித்திரையானது. உடனே பாம்பு வந்ததா என படுக்கையை தூக்கிக் பார்த்த பின்தான் நிம்மதியாய் இருந்தது.

மழைநேரத்தில் கால் துடைக்க வாசலில் சாக்குப் போடுவது வழக்கம். விடிய எழும்பிப் பார்த்தால் அதன் கீழ் மழைக்கு ஒதுங்கி பாம்பு இருக்கும். இது என்ன இங்கு மனிதர் இருக்க முடியாமல் உள்ளதே என்று புலம்பினால் காட்டு விலங்குகள் பாம்புகள் இருக்கும் இடத்தை நீங்கள் ஆக்கிரமித்து விட்டு இப்படிக் சொல்கிறீர்கள் என்பார்கள். இரவு இன்னொரு நாள் நல்ல நித்திரை. ஏதோ மேலே இருந்து விழுந்ததுபோல் இருந்தது.எல்லோரும் ஒரே இடத்தில் கிழங்கடிக்கின மாதிரி படுத்திருப்பதுதான் வழக்கம். உடனே எல்லோரையும் எழுப்பிபார்த்த போது முதல் பார்த்த திருநீலகண்டன். அடிப்பதற்கு ஆயத்தமாக பக்கத்தில் எப்பாதும் தடிகள் வைத்திருப்போம்.  ஓடிவிடும் என்பதால் தலையணை படுக்கை விரிப்பு எல்லாம் அப்படியே இருக்க ஓரே அடி.திருநீலகண்டர் சரி.

அப்படியே எல்லாவற்றையும் வெளியில் போட்டு விட்டுப்படுத்தோம்.

              இப்படியாக வன்னியில் இருந்த அதிகமான நாட்கள் நோயிலும், பயத்திலும் ,துன்பத்திலும் கழிய மனதில் வேதனையே மிஞ்சியது. எனவே, சொந்த இடமான யாழ்ப்பாணத்துக்கு புறப்பட ஆயத்தமானோம்.

அறிமுகம்

Thursday, March 19, 2009 | | 0 comments |

நீண்ட காலமாக எழுதவேண்டும் என்ற அவா இருந்தபோதும் எழுதிய போதும் எதையும் எதிலும் பிரசுரிக்கவில். நீர்வளம் நிலவளம் யாவும் நிறைந்த யாழ்குடாநாட்டில் உள்ள சிறுகிராமம் எனது ஊர்.  இங்கே உள்ளவர்களின் பிரதான தொழில் விவசாயம். எனினும் படித்தவர்கள் பலர் இலிதர்கள் ஆசிரியர்கள் கணக்காளர் பொறியியளாளர்கள் தாதிகள் என பல்வேறு அரச உத்தியோகங்களைக் கொண்டவர்களாக இருந்தனர். மருத நிலமும் அருகே நெய்தல் நிலமும் அமையப் பெற்ற பிரதேசமாக எனது ஊர். வயல் நிலங்கள் சூழப்பட்டு பாடசாலைகள் கோவில்கள்  சந்தைகள் என ஒருங்கே மையப்பெற்றது எனது ஊர்.

இன்று புலம் பெயர்வினாலும் இடப்பெயர்வினாலும் மக்கள் எங்கெல்லாமோ சென்றுவிட்டனர். ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் இருவர் என வாழும் வாழ்க்கையும் பரம்பரையான வீட்டுச் சொந்தக்காரர் இல்லாது வீட்டுச் சொந்தக்காரரே போனாலும் நீங்கள் யார் என்று கேட்கும் தன்மையும்தான் எனது ஊரின் நிலை. எங்கள் ஊரின் பல வீடுகளில் எங்களைப் பாதுகாக்க பாதுகாவலர்கள் நிறைய உண்டு. இந்த ஊரில் இருந்து இடம் பெயர்ந்து வாழ்பவர்களில் நானும் ஒருவர். எனது உள்ளத்தில்  இருக்கும் பலவற்றை வலைப்பின்னல் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள எண்ணி இவ் வலைப் பதிவை ஆரம்பித்திருக்கிறேன்.

 

எத்தனை கோடி

Wednesday, March 4, 2009 | | 0 comments |

எத்தனை கோடி மலர்கள் மலர்ந்தன இதயச் சோலையிலே- இதில்
எத்தனை எத்தனை வாடி உதிர்ந்தன எந்தன் வாழ்வினிலே

எத்தனை பாதைகள் எதிரே தெரிந்தன எனது கண்களிலேஅதி்ல்
 எத்தனை எத்தனை இருண்டு மறைந்தன எந்தன்வாழ்க்கையிலே
பாசமும் ஆசையும் பற்றிப் படர்ந்தன பாழும் மனதினிலே-அதில் 
ஓசையில்லாமல்ஓய்ந்தவை பற்பல உலக வாழ்க்கையிலே

கொள்கையும் நேர்மையும் உண்மையும்பூத்துக் குலுங்கின நெஞ்சினிலே-அதில் கல்லால் அடித்த கனிபோல் உதிர்ந்தவை கணக்கில வாழ்க்கையிலே.


                                                    படித்ததில் சுவைத்தது.