கறுப்பு யூலை – சில நினைவுகள்
Monday, July 27, 2009 | Labels: 1983, Eelam, ஈழம், கறுப்பு யூலை, தமிழர் | 0 comments |இலங்கை சுதந்திரம் அடைந்த பின் சிங்களவர்க்கும், தமிழர்களுக்கும் இடையில் அவ்வப் போது இனமுறுகல் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. யாழ்குடாநாட்டில் 70 களின் பின்னர் இராணுவத்தினரதும் பொலிசாரினதும் அடாவடித்தனங்கள் அதிகரித்திருந்தன. இளைஞர்களை அடிக்கடி தாக்குவது, தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டின் போது கலவரத்தை உண்டு பண்ணி கன்னீர் புகை பிரயோகத்தை மக்கள் மீது பிரயோகித்து அவர்களை நாலாபுறமும் கலைந்தோடச்செய்து 9 அப்பாவி மக்களைக் கொன்றும் நூற்றுக்கணக்கானோரை காயப்படுத்தியும் அம்மகாநாடு நடக்கவிடாமல் குழப்பினர். இதன்போது அவர்களுக்கு உடந்தையாக சில தமிழ் பொலிசாரும் செயற்பட்டனர். இத்தோடு யாழ் நூலகம் எரிப்பு, வர்த்தக நிலையங்கள் எரிப்பு, ஊடக நிலையங்கள் தாக்கியழிப்பு போன்ற இன்னோரன்ன வன்முறைகள் காவல் துறையினரால் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதனால் சீற்றங் கொண்ட இளைஞர்கள் பற்பல குழுக்களாக சேர்ந்து இவர்களுக்கு எதிராகச் செயற்படத் தொடங்கினர்.
இதன் விளைவாக குட்டிமணி, தங்கதுரை, பிரபாகரன் என பல தலைவர்கள் தோன்றினர். 1983ம் ஆண்டு யூலை மாதம் வி.பு.தலைவர் பிரபாகரனும் அவரது சகாக்களும் இராணுவத்தினரை மறித்து தாக்குதல் நடத்தியதில் 13பேர் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். இதுவே 1983ம் ஆண்டு கறுப்பு யூலைக்கு வழிவகுத்தது.
கொல்லப்பட்ட இராணுவத்தினரை கொழும்புக்கு கொண்டுவந்து பொரள மலர்ச்சாலையில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்தனர். இதனால் சிங்கள மக்கள் கொதித்தெழுந்தனர். இராணுவத்தினரின் அடக்கம் முடிய தமிழ் மக்கள் சிங்களக் காடையர்களினால் அங்கேயே தாக்கப்பட்டனர்.
அதன்பின் தென்பகுதி எங்கும் தமிழ்மக்கள் சிங்களவர்களினால் தாக்கப்பட்டு அவர்களின் வீடு வாசல்கள் அழிக்கப்பட்டு சொத்துக்கள் பறிக்கப்பட்டு உயிரோடு டயர் போட்டும் எரிக்கப்பட்டனர். வெலிக்கடைச் சிறைச்சாலையையும் விட்டு வைக்கவில்லை.50க்கு மேற்பட்ட தழிழ் கைதிகள் கொடூரமான முறையில் தாக்கி அழிக்கப்பட்டனர். சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிங்களக் கைதிகளாலும், வரவழைக்கப்பட்ட காடையர்களாலுமே தமிழ்கைதிகள் கோடாலியாலும் , கத்தி பொல்லுகளாலும், கூரிய ஆயுதங்களாலும் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இதனை சிறை அதிகாரிகளும் தடுக்கவில்லை. இங்கேயே குட்டிமணி, தங்கத்துரை என்ற போராளிகளும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். நீதிமன்ற தீர்ப்பின் போது இவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டிருந்தது. தான் தூக்கில்இடப்பட்டால் தனது கண்ணை தமிழரொருவருக்க தானமாக வழங்கும்படியும் தான் தனது கண்ணால் தமிழீழம் மலர்வதைக் காணவேண்டும் என்றும் கூறியிருந்தார். இதனால் குட்டிமணியை கொடூரமாகக் கொன்றவர்கள் இந்தக் கண்ணாலே தானே தமிழீழத்தைப் பார்க்கப்போறேன் என்றாய் என்று கூறி இரு கண்களையும் தோண்டி எடுத்து மிதித்து தமது வக்கிரத்தை தீர்த்துக் கொண்டனர்.
தற்போதைய அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவும் இதன்போது அங்கே காயமடைந்தார் என பேசப்பட்டது. அப்போதய அரசு உடனடியாக ஊரடங்கை அமுல்படுத்தாமல் எல்லா அழிவுகளும் முடிந்த பின்பே ஊரடங்கை அமுலுக்கு கொண்டுவந்தது. தென்பகுதியில் இருந்த தமிழ்மக்கள் எல்லா அசையும் அசையாச் சொத்துக்களையும் இழந்து உறவுகளையும் இழந்து ஏதிலிகளாக்கப்பட்டு உடுத்த உடையுடன் கோவில்களிலும், பாடசாலைகளிலும் அகதிகளாக தங்க வைக்கப்பட்டனர். அதனை அனுபவித்த மக்கள் இன்றும் இந் நினைவில் துன்புறுவர். அதன்பின் அம் மக்கள் சொந்த இடமான வடக்கு கிழக்கிற்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அக் கலவரத்தின்போது மனித நேயம் கொண்ட சிஙகளவர் பலர் தமிழ் மக்களை தாக்குதலில் சிக்காமல் காப்பாற்றினார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கதே.
இந் நிகழ்ச்சி தமிழ் மக்கள் மனதில் வடகிழக்குதான் தங்களுக்கு பாதுகாப்பு என்று புரிய வைத்தது. இவை தான் தமிழீழம்தான் தமிழ் மக்களுக்கு சிறந்த தீர்வு என தமிழ்மக்களுக்கு எண்ண வைத்த சம்பவங்ளில் முக்கியதானது .அன்று தொடங்கிய அகதி வாழ்வு இன்னும் நீடிக்கிறது. இன்றைக்கு முற்றிலும் இராணுவமயமாக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு உட்பட இலங்கைத் தீவே பாதுகாப்பற்றதாகத் தான் உள்ளது..