மீண்ட சொர்க்கம்
Saturday, April 4, 2009 | Labels: அனுபவம், இடப்பெயர்வு, நிகழ்வுகள், வன்னி வாழ்வு | 0 comments |ஜெயசுக்குரு இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து இடம்பெயர்ந்த யாழ் மக்களில் வாணியும் ஒருத்தி. அவள் தன் குடும்பத்துடன் இடம்பெயர்ந்து வன்னி மண்ணில் தஞ்சமடைந்திருந்தாள். இந்த வன்னி மண் காலங்காலமாக போரின் காரணமாக இடம்பெயர்ந்த பலருக்கும் அடைக்கலப் கொடுத்த மண். போர்த்துக்கேயர் , ஒல்லாந்தர், பிரித்தானியர் காலத்திலும் யாழ்மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து வன்னியில் இடம்பெயர்தோர் பலர். 1979,1983 களில் அநுராதபுரத்தில் இருந்தும், மலையகத்தில் இருந்தும் பெரும்பான்மை இனத்தவரின் கொடூர தாக்குதலில் சிக்கி பலியானவரை விட எஞ்சிய பலர் இம்மண்ணிலே தஞ்சமடைந்தனர். வாணி யாழ் மண்ணைவிட்டு எங்குமே சென்றிராதவள். தன் ஒரு மகனை எறிகணைக்குப் பறிகொடுத்த சோகத்திலும் ஏனைய பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டியும் வன்னிக்கு இடம்பெயர்ந்திருந்தாள். இச் சமயத்தில்தான் , சிலநாட்களாக மாங்குளத்தில் இருந்து தொடர்ந்து வாணி இருந்த பிரதேசத்தை நோக்கி எறிகணைகள் விழுந்தனவாயிருந்தன. அதேபோல போராளிகளால் ஏவப்படும் எறிகணைகள் கிளம்பும் சத்தமும் சதா கேட்ட வண்ணமிருந்தது. மலேரியா ஒவ்வொரு மாதமும் தாக்கி நோயில் சிக்கிய குடும்பத்தைப் பார்த்த போதும் யாழ் மண்ணின் எறிகணை குண்டு வீச்சினையும் இராணுவத்தின் தேடுதல் ,கைது என்பவற்றையும் விட இது பெரிதல்ல என்றே அவள் அதனைத் தாங்கிக் கொண்டிருந்தாள். அப்போது ஒருநாள் கிபீர் விமானம் ஒன்றுசுற்றி தாழ்ந்து அவள் வீட்டுக்கருகாமையில் குண்டு ஒன்றைப்போட்டது. அதில் இருவர் இறந்தும் அவர்கள் இருந்த குடிசை எரிந்தும் சிலர் எரிகாயங்களுக்குள்ளாகியும் இருந்தனர். இவற்றினைப் பார்த்து இங்கும் இருக்கமுடியாத நிலை வந்துவிட்டதே என்றுஎண்ணிஏங்கினாள். அப்போது அங்கே இருந்த பலர் யாழ்ப்பாணத்திற்கு சென்றனர். எனினும் கப்பல் சீராக ஓடுவதில்லை. வவுனியா ஊடாக திருகோணமலை சென்று அங்கிருந்து யாழ்ப்பாணம் வந்தடையும். இதில் லங்காமுடித்த கப்பலே முக்கியமாக பயணத்தை நடத்திக் கொண்டிருந்தது. வன்னியை விட்டு யாழ் சென்றவர்கள் தமது சொந்த இடத்தில் இருக்கவேணும் என்ற நோக்கத்திற்காகவும் ,பொருளாதாரக் கஷ்ட நிலையாலும் , அங்கே அவர்களைத் தாக்கிய நோயினாலுமே திரும்பிச் சென்றனர். வாணியின் மனமும் நாங்களும் எமது இடத்திற்குப் போவோம் என்று எண்ணி அதனைப் பிள்ளைகளிடம் கூறிளாள். பிள்ளைகளோ நாங்கள் இந்த நோயினால் இறந்தாலும் அங்கே வரமாட்டோம். இராணுவம் எம்மைக் கைது செய்தால் எம்மைக் காப்பாற்றுவீர்களா?என்று கேட்டனர். கடலிலே சீருடையோடும் ரையோடும் சடலங்கள் மிதப்பதாகச் செய்தி பத்திரிக்கைகளில் வந்திருக்கு. எங்களுக்கும் இப்படியான பிரச்சினைகள் வந்தால் என்ன செய்ய முடியும் என்று கேட்டனர். எனினும் தொடர்ந்து இரவில் கேட்கும் எறிகணை வீழ்ந்து வெடிக்கும் சத்தத்தால் அங்கே இருக்க முடியவில்லை. எனவே ஒருவாறு யாழ்ப்பாணம் போவதற்குச் சம்மதித்தனர். அதற்காக அங்கே அனுமதி பெறப்பட்டது. அனுமதி பெற்று ஒரு மாதத்திற்குள் பயணம் புறப்படாவிடில் அது காலாவதியாகிவிடும். எனவே அதற்குள் செல்ல திட்டமிட்டபோது அந்த நேரம் திருகோணமலைக்குச் செல்லாமல் மன்னாரில் இருந்து கப்பலில் யாழ்ப்பாணம் அனுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. மூன்றுநாட்களில் போகமுடியும் என்று கூறியோரை நம்பி மூன்றுநாட்களுக்கு தாக்குப்பிடிக்கக்கூடிய உணவுப் பொருட்களுடனும், வீட்டில் உள்ள பண்டம் பாத்திரம் புத்தகங்களுடனும் புறப்பட்டனர். குறித்த நாளில் வாகனம் ஒன்றை பலர் சேர்ந்து அமர்த்தி புறப்பட்டனர். வன்னி மக்களையும் மண்ணையும் விட்டுப் புறப்படுவது மனதிற்கு வருத்தமாய் இருந்த போதும்சொந்த மண்ணிற்குப் போகப்போகிறோம் என்ற நினைவு இனிமையாகவே இருந்தது. அழகிய காடுகளையும்,பயிர் நிலங்களையும், குடிசைகளையும், சில பெரிய வீடுகளையும் கடந்து மன்னார் நோக்கி வாகனம் புறப்பட்டது. வன்னி மண்ணிற்கு விடைகொடுத்து மன்னார் நோக்கிய பயணம் முற்றுப்பெற்றது. மன்னாரில் உள்ள உயிலங்குளம் என்னும் இடத்தில் மக்கள் அதாவது மன்னாரின் இராணுவக்கட்டுப் பிரதேசத்திற்குள் செல்வதற்காக காத்திருந்தனர்.அவ்விடத்தில் எம்மை இறக்கிவிட்டு வாகனம் சென்றது. அப்போது பன்னிரண்டு பைகள் நிறைந்த பொருட்களைக் கொண்டு வந்த வாணியின் குடும்பத்தின் ஒரு பையைக் காணவில்லை. அது எப்படிக் காணாமல் போனது என்பது யாருக்குமே தெரியவில்லை. அப்போது அங்கே உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் ஆராதனை இடம் பெற்றுக்கொண்டிருந்தது. மக்கள் நூற்றுக்கணக்காக கூடியிருந்தனர். வாணியும் அவள் குடும்பத்தினரும் பாயை விரித்து ஆறியிருந்தனர். பின்பு கொண்டுவந்த உணவுப் பொதிகளை எடுத்து உண்டனர். இரவு நித்திரை வரவில்லை வாணிக்கு. அவளின் சிந்தளை பின்நோக்கிச் சென்றது. வாணி யாழ் மண்ணிலே பிறந்து நான்கு சகாப்தமாய் வாழ்ந்திருந்தாள். வன்னிப்பிரதேசம் எப்படி இருக்கும் என்றோ அங்கு ஒரு காலம் வாழவேண்டிஇருக்குமென்றோ கனவு தன்னும் காணவில்லை. மேடு,பள்ளம் நிறைந்ததாயினும் வாழ்வில் இந்தளவு சோகத்தையும் வேதனையையும் எப்போதும் கண்டதில்லை. கணவன் வெளி நாடு சென்ற போதும் தன் பிள்ளைகளை போர்சூழலிலும்வாழப் பழகிக் கொண்டு சீரான வரழ்வினையே மேற்கொண்டிருந்தாள். 1995ம் ஆண்டு சூரியக்கதிர் இராணுவநடவடிக்கையை அரசாங்கம் யாழ் நகரைக் கைப்பற்றுவதற்காக மேற்கொண்டிருந்தது. அவ்வவ்போது பலாலியிலுள்ள இராணுவத்தினர் அரசாங்கம் கொடுத்திருந்த எறிகணைகளை தமிழ் மக்கள் வாழும் பகுதிக்கு கிறிக்கற் பந்து வீசுவது போல நாலாபுறமும் வீசுவர். எது எங்கே எப்போது விழும் என்று மக்களும் அறியமுடியாதிருந்தது. எறிகணை விழும் நேரமெல்லாம் ஒவ்வொருவரும் இரவிரவாக பதுங்கு குழிகளையே நாடி தஞ்சம் கொள்வர். அதற்குள்இருக்கும்போது தாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற நம்பிக்கை ஒவ்வொருவர் மனதிலும் இருக்கும். அப்படி ஒருநாள் இராணுவத்தினர் வடமராட்சியை நோக்கி தம் எறிகணை வீச்சின் வீரத்தைக் காட்டினர். ஏதோ பயங்கர வாதிகளின் இலக்குகளை அழிக்கிறோம் எனச் சொல்லி பதுங்கியிருக்கும் மக்களைக் கொன்று குவித்தனர். இதில்தான் வாணியின் புதல்வனும் தன் செங்குருதியை மண்ணிற்கு ஈந்து அன்பு அன்னை வாணியையும், அப்பா ,சகோதரங்களையும் விட்டு விண்ணுலகு சென்றான். இதன் சோகம் தாங்காது வாணி ஏனைய பிள்ளைகளோடு என்றும் சென்றிராத வன்னி மண்ணிற்குச் சென்றாள். கிளாலி கடல் கடந்து சென்றால் அக்கடலிலேயே இறக்க வேண்டி நேரிடும் என்பதால் எப்போதும் கடல் தாண்டாத அவள் குடும்பம் இப்போது வேறுவழியின்றி கடல் தாண்டத் துணிந்தது. ஆலங்கேணி என்னும் இடத்தில் படகுகள் தரையிறக்கி விட்டன. அங்கேயிருந்து வன்னியின் பல இடங்களுக்கும் மக்கள் சென்றனர். வாணியும் பிள்ளைகளும் வன்னியின் ஓரிடம் சென்றனர். முன்பின் அறியாத ஒரு பாடசாலையில் லொறியில் இருந்து இவர்கள் இறக்கி விடப்பட்டனர். யாழ்குடாவில் இருந்து வந்த களைப்பு மிகுதியால் அப்படியே நித்திரையாகி விட்டனர்.மார்கழிப் பனியின் குளிரினால் தாக்கப்பட்டதை உணர்ந்த வாணி கொண்டுவந்த துணியினால் பிள்ளைகளைப் போர்த்தினாள். அடுத்த நாள் காலை அங்கே கொடுத்த தேநீரும் பாண்துண்டும் பசிமிகுதியினால் என்றும் கண்டிராத தேவரமிர்தத்தை ஒத்திருந்தது. பின்பு தெரிந்த சிலரால் ஒரு வீட்டில் சேர்க்கப்பட்டு அங்கிருந்தாள். வன்னி வளம் மிகுந்ததாயினும் மலேரியா நுளம்பு அங்கே தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கியது. எங்கே பார்த்தாலும் நோய். ஒவ்வொரு குடும்பத்திலும் , ஒருவரை ஒருவர் பார்க்கக் கூட ஆளில்லாது எல்லோரும் நோய்வாய்பட்டனர். ஆஸ்பத்திரிக்குச்செல்வதற்கு வாகனங்களுக்குக் கூட எரிபொருள் இல்லை. நோயோடு நடந்து சென்று மருந்து வாங்கி வந்தவர்கள் அடுத்தநாள் இறந்ததையும் வாணி அறிவாள். ஆஸ்பத்திரிகளில் நோயாளர் இருப்பதற்குக் கூட இடம் இல்லை. சைக்கிளில்தான் செல்லலாம் ஆனால் சைக்கிளில் செல்வதற்கு சைக்கிள் ஓட்டத் தெம்பில்லை. உதவி செய்யும் உள்ளம் படைத்த வன்னி மக்களிடையே ஓரிருவர் உபத்திரவமும் செய்தனர் என்பதையும் மறுக்கமுடியாது. அங்கே தண்ணீர் இன்மை மிகவும் கஷ்டமாய் இருந்தது. பக்கத்திலே தண்ணீருக்குப் போனால் தங்கள் கிணற்றிலே தண்ணீருக்கு வரவேண்டாம் என்று சொல்பவரும் உண்டு. அதனால் குளிக்காமல் கூட நிறைய நாள் இருக்க வேண்டியும் இருந்தது. இத்தனை கஸ்டங்கள் இருந்த போதும் திரும்பவும் சொந்த மண்ணிற்குத் திரும்ப விருப்பம் வரவில்லை. இப்படியே பின்நோக்கி சிந்தனை வயப்பட்டிருந்த வாணியின் சிந்தனையை எல்லோரும் சென்றிப் பொயின்றுக்குப் போகின்றார்கள் என்ற சொல் கலைத்தது. அதைக் கேட்டு தானும் கொண்டு வந்த சாமான்களையும் தூக்கிக் கொண்டு அவ் இடத்திற்குச் சென்று காத்திருந்தாள். சூரியன் தன் கதிர்களில் வெம்மையை வீசிக் கொண்டிருந்த போது மக்களை இராணுவ சூனியப் பிரதேசத்திற்கச் செல்ல போராளிகள் அனுமதித்திருந்தனர். கம்பி வேலிக்குள்ளால் தம் பயண அனுமதியைக்காட்டி செல்ல வேண்டி இருந்ததால் ஒவ்வொருவரும் முதல் செல்லுவதற்காகப் போராடிக் கொண்டிருந்தனர். ஒருவாறு அந்தப் போராட்டத்தில் வெற்றியீட்டியோர் வெற்றிக்களிப்போடு பொதிகளைச் சுமந்த வண்ணம்முன்னே செல்ல கிரிசாம்பாள் போன்று வாணியும் பிள்ளைகளும் சிரமத்தின் மத்தியில் பின்னே சென்றனர். அங்கே இராணுவத்தினசின் சோதனைக்காக சுட்டெரிக்கும் வெயிலில் , வயல் வெளிகளில் மக்கள் வரிசையில் நின்றனர். இவர்களும் சென்று அவ்வரிசையில் இணைந்து கொண்டனர். அவர்களின் சோதனை முடிய பிற்பகல் நான்கு மணியானது. அதன் பின் ஏதோவெல்லாம் பதிந்து பஸ்சில் ஏற்றி ஒரு பாடசாலையில் கொண்டுபோய் விட்டனர். அன்றிரவு அப்பாடசாலையில் தங்க வேண்டியிருந்தது. வெட்ட வெளியில் வானமே கூரையாக பூமியே படுக்கையாக அவ்விரவு கழிந்தது. அடுத்தநாள் உங்களை எருக்கலம்பிட்டிக்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறி , மீண்டும் சோதனை , கியூவரிசை என்றெல்லாம் சோதித்து பின்பு பஸ் வண்டியில் ஏற்றி இன்னொரு பாடசாலையில் இறக்கிவிட்டனர். அங்கே முதலில் வந்தவர்கள் இடம்பிடித்து வைத்திருந்தனர். பாடசாலை கட்டிட வாசலை அண்மித்த இடத்தில் களைப்பின் மிகுதியால் சிறிது இருப்போம் என்று தான் கொண்டுவந்த பொதியை அவ்விடத்தில் வைத்தான். அங்கே இருந்தவர்கள் இது எங்கள் இடம் இங்கே வைக்க வேண்டாம் என்று கூற அவள் மகனுக்குக் கோபம் வந்துவிட்டது. அம்மா நாங்கள் இப்படியெல்லாம் சீரழிய வேண்டுமா?என்று கூறி இதைவிட யதழ்ப்பாணத்திலேயே இறந்திருக்கலாம் என்று வேதனைப்பட்டான். அதைப்பார்த்து கலங்கிய வாணி எம் இனத்தின் செயற்பாடு இந்த நேரத்தில் கூட குறுகலாயுள்ளதே என்று நொந்தாள். சிலர் பாடசாலைக் கட்டிடத்தின் மேல்மாடியில் ஒரு இடத்தில் இருக்கச் சொன்னார்கள். மூட்டை முடிச்சுக்களோடு சிறுபிள்ளைகள் படிகளில் செல்வதைப் பார்க்க , இந்தக் காட்சிகளைப் பார்க்க ஏன்தான் இந்தக்கண்கள் இருந்தன என்று தோன்றியது வாணிக்கு. மூன்று நாட்களில் யாழ்ப்பாணம் செல்லலாம் என்று வந்தவர்களுக்கு இருபது நாட்கள் சென்ற போதும் பயணம் செல்லமுடியவில்லை. கப்பல்கள் சீராக ஓடாமல் பயணமும் பிந்திப் போனது.பின்பு பேசாலைக்குச் சென்று அங்கிருந்து கப்பலில் யாழ்ப்பாணம் போவதற்கு ஆயத்தப்படுத்தப்பட்டு பேசாலைக்குச் சென்றனர். அங்கேயும் சிறிது நாள் தங்க வேண்டி இருந்தது. பயணம் செல்ல வந்தவர்களே அங்கு இறந்து விட்டிருந்தமையும் வாணியின் மனதை வெகுவாகப் பாதித்தது. ஒருவாறு ஒரு கப்பலில் பயணம் செய்யும் நேரம் கிட்டியது. அங்கும் பொதிகள் சோதனை உடற் சோதனை என்பன செய்யப்பட்டன. பின்பு சிறு படகில் சென்று நடுக்கடலில் உள்ள கப்பலில் ஏற்றினார்கள். கப்பலும் காங்கேசன் துறைமுகத்தை நோக்கிப் பயணமானது. பயணத்தின்போது கடலைத்தவிர வேறொன்றும் தெரியவில்லை. துறைமுகத்தை அன்டியபோது தான் அதன் கரை தெரிந்தது. பின்பு ஒது கட்டிடத்தில் கொண்டு வந்து விட்டனர். யாழ் மண்ணில் வந்துவிட்டோம் என்ற நினைப்பே ஒரு சுகத்தையும், மகிழு்ச்சியையும் தந்தது வாணிக்கு . அங்கே வீசிய காற்று புதிய சுகந்தத்தைக் கொடுத்தது அவளுக்கு. நீர் நிரப்பி இருந்த தொட்டியில் மனமாரக் குளிக்க முடிந்தது அவளால். அப்போது அவள் தான் இழந்து விட்டதையெல்லாம் பெற்றதுபோல் உணந்ந்தாள். அடுத்த நாள் காலை மீண்டும் பஸ்களில்ஏற்றி அவரவர் ஊர்களுக்கு அனுப்பினர். காங்கேசன்துறை எனும் இடம் முட்களும் புதர்களும் மண்டியதாகவும் இராணுவம் மட்டுமே உள்ளதாகவும் தெரிந்தது. உடைந்த இடிந்த கட்டிடங்களும் தரைமட்டமான வீடுகளும் சன்னங்கள் பதிந்த சுவர்களும் பார்ப்பதற்கு வேதனையாய் இருந்தது. தெல்லிப்பழையின் பின்பு வந்த பிரதேசத்திலேயே மக்களைக் காணக்கூடியதாய் இருந்தது. பின்பு வடமராட்சி நோக்கி பிரயாணம் மேற்கொண்ட வாணியும் பிள்ளைகளும் வீதியோரமிருத்த அழிந்த வீடுகளையும் இராணுவ சென்றிகளையும் பார்த்து பிரமித்தனர். யாழ் மண் இரரணுவமயமாக இருந்தது. தனது வீட்டின் முன் வந்து நின்ற வாகனத்தில் இருந்து இறங்கிய வாணி தாயினைக் கண்ட மகவு போல் தன் வீட்டு முற்றத்திலே குந்தினாள். மீண்ட சொர்க்கமாய் அவள் உள்ளம் மலர்ந்தது.